வறுத்தெடுக்கும் வெயில்..வண்டலூர் பூங்காவில் ஒரு வாரமாக தண்ணீர் இல்லை…

First Published May 4, 2017, 1:52 PM IST
Highlights
there is no water in vandalur zoo


தண்ணீர் பிரச்சினையும், கொளுத்தும் வெயிலும் மனிதர்களை மட்டுமல்ல ,வனவிலங்குகளையும் பாதித்துள்ளது.

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தண்ணீர் சப்ளை திடீரென ரத்து செயய்ப்பட்டதால், அங்குள்ள 2,500க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் கடும் தாகத்தால் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளன.

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா மிகவும் புகழ்பெற்றது. 60 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில், புலி, சிங்கம், கொரிலா, நீர்யானை, கான்டாமிருகம் என 2500 விலங்குகள் இருக்கின்றன. இந்த விலங்குகளின் தேவைக்கும், பராமரிப்புக்கும் நாள்தோறும் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.

தண்ணீர் தேவைக்காக வண்டலூர் பூங்காவுக்குள் 13 சிறிய கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் இருக்கின்றன. இருந்தபோதிலும்,வண்டலூர் உயிரியல் பூங்காவின் தண்ணீர் தேவையை பாலாறு நீர் மட்டுமே தீர்த்து வந்தது.

இந்நிலையில், தமிழக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்சுத்திகரிப்பு வாரிய அதிகாரிகள் திடீரென கடந்த ஒருவாரமாக பூங்காவுக்கு வரும் முக்கிய நீர் குழாயை அடைத்து, குடிநீர் சப்ளையை நிறுத்திவிட்டனர். இதனால், தண்ணீர் தேவையில், 80 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டு, சென்னை மெட்ரோவாட்டர், பூங்காவின் தண்ணீரை மட்டுமே மிருகங்கள் வாழ்ந்து வருகின்றன.

இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் சண்முகம் கூறுகையில், “ வண்டலூர் பூங்காவில் 2500க்கும் மேற்பட்ட மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் தண்ணீர் தேவை பராமரிப்பு, 400 வேலையாட்களின் அன்றாடப் பயன்பாடு என அனைத்துக்கும் சேர்த்து 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், திடீரென தமிழக குடிநீர் சப்ளை மற்றும வடிகால்வாரியம் எந்தவித முன்அறிவுப்பும் இன்றி தண்ணீர் சப்ளையை நிறுத்திவிட்டது.  எங்களுக்கு எந்த வித நோட்டீஸும் அளிக்கவில்லை. இப்போது வண்டலூர் பூங்காவுக்குள் இருக்கும் தண்ணீரை நம்பியே இருக்கிறோம். இப்போது 2 லட்சம் லிட்டர் மட்டுமே எங்களுக்கு கிடைத்து வருகிறது.  

மெட்ரோ பாதை கட்டுமானம் நடப்பதால், திடீரென எங்களுக்கு வரும் தண்ணீர் இணைப்பை துண்டித்துவிட்டார்கள். இதனால், நாங்களும், விலங்குகளும் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம். விலங்குகளுக்கு போதுமான குடிதண்ணீர் கொடுத்து ஒருவாரமாகிவிட்டது.  

பூங்கா லாபத்தில் இயங்கினாலும், வெளியில் இருந்து தண்ணீரை வரவழைப்போம். ஆனால், கடுமையான நஷ்டத்தில் பூங்கா இயங்குகிறது. இப்போது பூங்காவுக்குள் இருக்கும் நிலத்தடி நீரை நம்பியை நாங்கள் பூங்காவை நடத்தி வருகிறோம். ஆனால், கொளுத்தும் வெயிலால், நாளுக்கு நாள் நிலத்தடிநீர் மட்டமும் சரிந்து வருகிறது.

400 பணியாளர்கள் விலங்குகளின் பராமரிப்பு, பார்வையாளர்களை ஒழுங்குபடுத்துதல், உள்ளிட்ட பல பணிகளுக்காக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஷிப்ட் முறையில் பணியாற்றுகிறார்கள். பார்வையாளர்கள் வரும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டுமானல், சுத்தமாக பராமரிக்க தண்ணீர் வேண்டும், மிருகங்களும் நோயின்றி இருக்க நாள்தோறும் குளிக்கவைப்பது அவசியம். இப்போது இருக்கும் நிலையில் மிருகங்கள் குடிக்கவே தண்ணீர் இல்லை” எனத் தெரிவித்தா்.

இது குறித்து தமிழக குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் மூத்த பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, “ செங்கல்பட்டு அருகே இந்த சாலையில் வேலை நடந்துவருவதால், திடீரென தண்ணீர் சப்ளையை நிறுத்த வேண்டியநிலை ஏற்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் சீரடையும்” எனத் தெரிவித்தார். 

click me!