
தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யபடாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னைக்கு வரவேண்டிய மின்சாரம் வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து தான் வந்து கொண்டு இருக்கிறது.
அதற்கு தமிழக அரசு தரவேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை என்பதால் தான் மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது என்ற குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.
இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரமும் ரத்து செய்யப்படமாட்டாது.
தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
மின்வாரியத்திற்கு ரூ. 12,000 கோடியாக இருந்த இழப்பு தற்போது ரூ. 3,000 கோடியாக குறைந்துள்ளது.
ஏப்ரல் 26 ஆம் தேதி மின் பாதையில் ஏற்பட்ட பழுத்தால் சென்னையில் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
தமிழகத்தில் மின்தடை தான் ஏற்பட்டதே தவிர மின் வெட்டு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.