
உதய் திட்டத்தால் இழப்பு குறைந்துள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் மற்றும் மின்சாத்துறை அமைச்சரை சந்தித்து ஜிஎஸ்டி வரி குறித்து பேச உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். உதய் மின் திட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் இல்லையென்றால் தமிழகத்தில் இத்திட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கடைசி வரை மறுத்து வந்தார்.
ஆனால் ஜெயலலதா மறைந்த சில மாதங்களிலேயே புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு உதய் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ்கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார்.
மேலும் மத்திய அரசு மின் துறையில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களால் கடன் சுமை குறைந்துள்ளதாகவும், இத்தகைய சீர்திருத்தங்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்றதாகவும், கூறிய அவர்,மின்சாரத்துறையில் நவீன யுத்திகளை கையாள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மின்சாரத்துறையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.