
பெரம்பலூர்
அரசின் திட்டங்கள் குறித்த எந்தவித தகவலையும், மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவிப்பது கிடையாது என்று பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆர்.பி. மருதராஜா தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆர்.பி. மருதராஜா தலைமை வகித்தார்.
அப்போது கூட்டத்தில் அவர் பேசியது: "அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த எந்தவித தகவலையும், மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவிப்பது கிடையாது. திட்டங்கள் குறித்த தகவலை மக்கள் பிரதிநிதிகள் தெரிந்து கொண்டால்தான், அதை மக்களிடம் தெரிவிக்க முடியும்.
பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்து நாளிதழ்களில் செய்தி வரும்போதுதான் நாங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. அதிகாரிகளை காட்டிலும், மக்களை அதிகமாக நாங்கள்தான் சந்திக்கிறோம். திட்டங்கள் குறித்த எவ்வித தகவலையும் நாங்கள் தெரிந்துகொள்ளாத பட்சத்தில், அத்திட்டம் குறித்த சந்தேகங்களை, விளக்கத்தை, குறைபாடுகளை, செயல்பாடுகளை இந்தக் கூட்டத்தில் எவ்வாறு ஆய்வு செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியது: "இந்தக் கூட்டத்தின் பொருள் குறித்து தற்போது தெரிவிக்காமல், முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மேலும் பல திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை கொண்டுவந்திருக்க முடியும். கூட்டத்தின் பொருளே தெரியாமல் அதிகாரிகளிடம் எதைப்பற்றி ஆய்வு மேற்கொள்வது என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2017- 2018-ஆம் நிதி ஆண்டில் ரூ.60.88 கோடி மதிப்பீட்டில் 1536 பணிகளுக்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதில் ரூ.11.02 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட15 பணிகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2017- 2018-ஆம் நிதி ஆண்டுக்கு ரூ.15.92 கோடியில் அமைக்கப்பட்ட சாலைககள், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கீழ் 28693 பேருக்கு வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, சிதம்பரம் மக்களவை உறுப்பினர் மா.சந்திரகாசி, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ப.அருள்தாசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மனோகரன், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.