ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

By Manikanda PrabuFirst Published Jun 7, 2023, 11:35 AM IST
Highlights

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக வெளியான தகவல் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்

சென்னையை அடுத்த அம்பத்தூரில் தமிழக அரசின் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு பால்பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான தொழிலாளர்களை ஹரிஓம் என்ற மனிதவள நிறுவனத்திடமிருந்து ஆவின் நிறுவனம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவுட் சோர்சிங் மூலம் பெறப்படும் இந்த மனிதவளத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருவதற்கிடையே, ஹரிஓம் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனிடையே, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, ஆவின் நுழைவு வாயில் முன்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. ஆவின் குழந்தை தொழிலாளர் முறைக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

இந்த நிலையில், ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆவின் பால் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை. தகவல் வந்ததும் அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்பி ஆய்வு செய்தோம். ஆய்வில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்மத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது என்றார்.

குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அம்பத்தூர் ஆவின் ஏற்கனவே ஊதிய பிரச்சினைகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

click me!