
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகலாம் எனவும் வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதேபோல, அதிகபட்சமாக சிவகங்கையில் 14 செ.மீ., ஆடுதுறை, திருப்புவனத்தில் 7 செ.மீ., பெரம்பலூரில் 6 செ.மீ., மானாமதுரை, கும்பகோணம், ஜெயங்கொண்டத்தில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.