
இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் தடை கால்நடை வளர்ப்போரின் உரிமைப் பறிப்பதாகும் என்றார்.
இது அரசியல் சட்டத்துக்கு புறம்பாக உள்ளது என்றும் இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் உணவை உண்ணுவதற்கும், விரும்பும் மதத்தைக் கடைபிடிப்பதற்கும், உடை உடுப்பதற்கும் தனி மனித சுதந்திரம் உண்டு என்றார். இதில் தலையிட எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் நாராயணசாமி கூறினார்.
மத்திய அரசு இதில் தலையிட்டு மாட்டுக்கறி, ஓட்டகக்கறி, எருமைக்கறி போன்றவற்றை உண்ணக்கூடாது எனக்கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற சமுதாயத்தினர் மாட்டுக்கறியை உண்கின்றனர். மேலும் முதிர்ச்சி அடைந்த மாடுகளை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் வீதியில் திரிய விடும் நிலை ஏற்படும். அவற்றின் மூலம் உயிர்கொல்லி நோய்கள் ஏற்படும் என்றார்.
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசாணையை எதிர்த்து அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்துள்ளனர்.
எனவே மத்திய அரசின் கால்நடை விற்பனை தடை விதிகளை திரும்பப் பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக்கூடாது என்ற தடையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் கூறினார்.