தேங்காபட்டணத்தில் திடீர் கடல் சீற்றம் - கடலரிப்பில் தடுப்புசுவர்கள் மாயம்

 
Published : Nov 09, 2016, 04:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
தேங்காபட்டணத்தில் திடீர் கடல் சீற்றம் - கடலரிப்பில் தடுப்புசுவர்கள் மாயம்

சுருக்கம்

தேங்காபட்டணம் பகுதியில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் கடலரிப்பு தடுப்புசுவர்கள் அடித்து செல்லப்பட்டன. அரையன்தோப்பில் மீண்டும் சாலை சேதமடைந்தது.

குமரி மாவட்டம் தேங்காபட்டணம் பகுதி அரையன் தோப்பு கடற்கரை கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் கடலரிப்பால் அந்த கிராமம் முற்றிலும் சீரழிந்தது. அந்த கிராமத்தில் உள்ள 25 வீடுகளை கடல் அடித்து சென்றதுடன், சாலை, குடிநீர் இணைப்பு, மின்சாரம் போன்ற அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

இதனால் அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அரையன் தோப்பில் சாலை துண்டிக்கப்பட்டதால், ராமன்துறை, முள்ளூர்துறை, இனயம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக மீன்பிடி துறைமுகம் செல்லும் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அரசு பலமுறை அந்த இடத்தில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் அமைத்தாலும் மீண்டும் மீண்டும் அந்த பகுதி கடலரிப்பால் பாதிப்பு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த பகுதியில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த அரையன்தோப்பு உட்பட 3 இடங்களில் தூண்டில் வளைவுகள் கடந்த சில மாதங்கள் முன்பு அமைக்கப்பட்டன. அந்த தூண்டில் வளைவுகளும் கடந்த சீசனில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் பாதிக்கு மேல் சேதமடைந்தன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அரையன்தோப்பு வழியாக முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. சேதமடைந்த சாலையை சீரமைக்க அரசிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதி பொதுமக்கள் உட்பட சில சமூக ஆர்வலர்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் அரையன்தோப்பு சாலையை சீரமைத்தனர். இதை தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வாரியம் அந்த பகுதியில் 7 மின் கம்பங்களையும் நட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் தேங்காபட்டணம் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த கடல் சீற்றம் நேற்று வரை தொடர்ந்தது. இதில் அரையன் தோப்பு பகுதி மீண்டும் கடலரிப்பால் சேதமடைந்தது.

ராட்சத அலைகள் எழும்பியதால் கடல் நீர் தடுப்பு சுவர்களை தாண்டி கரைப்பகுதியை ஆக்கிரமித்தது. இதனால் கடலரிப்பு தடுப்புசுவர்கள் கடலில் அடித்து செல்லப்பட்டன. அலையின் ஆக்ரோஷத்தால் பொதுமக்களால் சீரமைக்கப்பட்ட சாலையும் உருக்குலைந்தது.

இதையொட்டி நேற்று முதல் அந்த பகுதி வழியாக மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர் கடலரிப்பால் அந்த பகுதி முற்றிலும் பாதிக்கபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கடல் சீற்றத்தால் நேற்று தேங்காபட்டணம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

PREV
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!