சென்னையில் துணிகரம் – அமைச்சர்கள் ஏரியாவில் ஜவுளிக்கடையின் சுவரில் துளைப்போட்டு ரூ.5 லட்சம் சேலைகள் திருட்டு

First Published Oct 21, 2016, 3:27 AM IST
Highlights


அமைச்சர்கள் குடியிருக்கும் ஏரியாவில் செயல்படும் ஜவுளிக்கடையில், சுவரில் துளைப்போட்டு ரூ.5 லட்சம் சேலைகள், ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை ராஜாஅண்ணாமலை புரம் அருகே வீனஸ் ரோட்டில் ஜவுளிக்கடை உள்ளது. இதன் உரிமையாளர் விஜயன். இந்த கடைகயில் 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

இந்த பகுதியிலேயே பெரிய ஜவுளிக்கடை என்பதால், தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், இந்த கடையில் துணிகளை எடுத்து செல்வார்கள். இன்னும் 10 நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், லட்சக்கணக்கான ஜவுளி ரகங்களை விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி கொண்டு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்தனர். அப்போது, அங்கு ஷோக்கேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விலை மதிப்புள்ள சேலைகள் காணாமல் திடுக்கிட்டார்.

மேலும் கடையில் இருந்த பொருட்கள் உடைக்கப்பட்டும், சிதறியும் கிடந்தன. கல்லா பெட்டியை திறந்து பார்த்தபோது, ரூ.50 ஆயிரம் பணமும் காணாமல் இருந்தது.

தகவலறிந்து அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, நள்ளிரவில் கடையின் பின்புறம் வந்த மர்மநபர்கள், சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விலை மதிப்புள்ள சேலைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை, ஆய்வு செய்து, மர்மநபர்கள் குறித்து விசாரிக்கின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட ஜவுளிகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

அமைச்சர்கள், தொழிலதிபர், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், ஜவுளிக்கடையின் சுவரில் துளைப்போட்டு, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம், அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!