
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பெண், இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார் (57). இவர், கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பு 7-வது தெருவில் வசித்து வருகிறார்.
இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் மற்றும் மகனுடன் வசித்து வந்த இவர், பார்வை குறைவான தனது தாயாரை கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளுக்காகவும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (40) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார்.
கடந்த 5-ஆம் தேதி ரமேஷ்குமாரும், அவருடைய மகனும் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் வீட்டில் அவரது தாயாரும், வேலைக்கார பெண்ணும் இருந்துள்ளனர். நகைகள் வைத்திருந்த அலமாரியின் சாவியை மறந்து வீட்டிலேயே விட்டு சென்று விட்டாராம் ரமேஷ்குமார்.
மாலையில் வந்து பார்த்தபோது அலமாரியில் இருந்த 17 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. வேலைக்காரி மாரியம்மாளும் மாயமாகி இருந்தார்.
எனவே, அந்த நகையை வேலைக்கார பெண் திருடிச்சென்று விட்டதாக கல்பாக்கம் காவல் நிலையத்தில் ரமேஷ்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலாளர்கள், ராஜபாளையம் சென்று அந்த பெண்ணை விசாரணைக்காக நேற்று முன்தினம் கல்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தில் அவரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது திடீரென மாரியம்மாள் மயங்கி விழுந்து விட்டாராம். காவலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனராம். ஆனால், அங்கு அந்த வேலைக்கார பெண் மாரியம்மாள் உயிரிழந்து விட்டார். இரத்த அழுத்தம் குறைவால் மாரியம்மாள் இறந்து விட்டார் என்று காவலார்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண், காவல் நிலையத்தில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.