பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல லட்சக்கணக்கான மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கூட்டம் கூட்டமாக புறப்பட தயாராகும் மக்கள்
சொந்த ஊரில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளியூர்களில் வேலை தேடி நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள் அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகிறார்கள். வந்தோரை வாழ வைக்கும் ஊராக சென்னை திகழ்கிறது. எனவே உறவினர்கள், நண்பர்கள், சொந்த ஊரை விட்டு வந்தவர்கள் விடுமுறை தினங்களில் மட்டும் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி என்ற நாட்கள் என்றால் கேட்கவா வேண்டும் கூட்டம், கூட்டமாக படையெடுப்பார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு ஒரே நாளில் மட்டும் 15 லட்சம் பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சிறப்பு ரயில், பேருந்து
அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகிறார்கள். ரயில்களில் ஏற்கனவே அனைத்து பெட்டிகளும் நிரம்பிவிட்ட நிலையில் சிறப்பு ரயில்களும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு பேருந்துகளும் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. இதனிடையே ஒரே நாளில் பல லட்சம் பேர் பயணம் செய்வதால் பெரும்பாலானவர்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆம்னி பேருந்து கட்டணம் என்ன.?
இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணமானது விஷேச நாட்களில் விமான கட்டணத்திற்கு இணையாக வசூலிக்கப்படும். அந்த வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கே 3ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. இதனை தமிழக போக்குவரத்து ஆணையரகம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் பொங்கல் ப்பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ஆம்னி பேருந்து கட்டணம் மற்றும் ஆம்னி பேருந்தின் வசதிகள், பர்மீட் போன்றவற்றை கண்காணிக்க நடவக்கை எடுத்துள்ளது. அதன் படி 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.