ஃபெஞ்சல் புயல்! தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு! இதனால் என்ன பலன் தெரியுமா?

Published : Jan 04, 2025, 04:33 PM ISTUpdated : Jan 04, 2025, 05:04 PM IST
ஃபெஞ்சல் புயல்! தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு! இதனால் என்ன பலன் தெரியுமா?

சுருக்கம்

ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. நவம்பர் 30ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. 

இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி உபரி நீர் வெளியேற்றதை அடுத்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் கடும் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடுகள், வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்தன.  பல கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை புரட்டி போட்டது. திருவண்ணாமலையில், மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, புயல் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்து சென்றனர். 

 ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவும் விதமாக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 944.80 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.  மத்திய குழுவின் ஆய்வுக்கு பிறகு தேசிய பேரிடர் நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை தீவிர பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சீரமைப்பு பணிகளை மேலும் வேகமாக செயல்படுத்த முடியும். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!