எதிர்த்துப் போராட வேண்டிய காலம் நெருங்குகிறது; அறைகூவல் வரும் தயாராக இருங்கள் -பாரதிராஜா சஸ்பென்ஸ்...

First Published Jan 17, 2018, 8:43 AM IST
Highlights
The time to fight is get ready -bardiraja suspense ...


மதுரை

மொழியையும், பண்பாட்டையும் காக்க போராட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறைகூவல் வரும், அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பிரசிடென்சி  சர்வீஸ் கிளப் சார்பில் தமிழர் திருநாள்,  விளையாட்டு விழா, பொதுக்குழு என முப்பெரும் விழா மதுரை  மாவட்டம், அரபிந்தோ மீரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு பிரசிடென்சி சர்வீஸ் கிளப் தலைவர் உதயம் எம். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் எம்.பி. இலட்சுமணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன்,  செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பார்த்திபன், எம்.உதயகுமார்,  பதவி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.  நல்லாசிரியர் விருது பெற்ற பி.ஜெயச்சந்திரன், பி.செல்வி, ப்ரீத்தி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் ஆர்.சிவக்குமார், அரபிந்தோ மீரா பள்ளி தலைவர் சி.சந்திரன், அரிமா சங்க ஆளுநர் டி.தனிக்கொடி, என்விரோ கேர் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.ராஜ்மோகன் ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியது:

"பிறந்த மண்ணையும்,  இனத்தையும்,  தாய் மொழியையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.  இந்த மண்ணில் பிறந்தவர் என்பதில் பெருமைப்பட வேண்டும். நம்மில் ஒருவருக்கு ஆபத்து என்றால், எங்கோ நடக்கிறது என்று இருந்துவிடக் கூடாது.  உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால், எதிர்ப்பு சக்தியை இழந்துவிட்டால் நமது மானம் பறிபோகிவிடும்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கவிஞர் வைரமுத்து, எங்கிருந்தோ வந்தவர்களால் சிறுமைப்படுத்தப்படுகிறார். உலகத்துக்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர் வைரமுத்து.  அவரது படைப்புகள் காலத்தை வென்றவை. தமிழ் இலக்கியத்தை 8 திசைக்கும் பரப்பியவர். 7 முறை தேசிய விருதைப் பெற்றவர். அவரை மாசுபடுத்துவது மொழியை மாசுபடுத்துவதைப் போன்றது.

தமிழகத்தின் மூன்று முதல்வர்கள் என்னை அரசியலுக்கு அழைத்தனர்.  நான் ஒரு கலைஞன், கலைஞனராகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று மறுத்துவிட்டேன்.

இப்போது பின்வாசல் வழியாக தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கின்றனர். அவர்களது கனவு நிறைவேறாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.

தனிப்பட்ட வைரமுத்துவை விமர்சிக்கலாம். ஆனால், அவரது புலமையை, இனத்தை, பெற்ற தாயை விமர்சிப்பதை ஏற்க முடியாது.

இதை எதிர்த்துப் போராட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறைகூவல் வரும், அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.  

நாம் முன்னெடுக்க உள்ள போராட்டம் தனிமனிதனுக்காக அல்ல, மொழியைக் காக்க, நமது பண்பாட்டைக் காப்பதற்காகத் தான்" என்று அவர் பேசினார்.

click me!