
தூத்துக்குடி
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சுப்பையா, துணைத் தலைவர் மகாலிங்கம், மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவின் இயக்குநர் ஸ்ரீவை குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் பொறுப்பாளர் ராமசுப்பு, விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் மணி, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலர் முகம்மதுஅலி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
"பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி அந்தந்த கூட்டுறவு சங்கத்தில் வைத்து பாலின் தரத்தையும், அளவையும் நிர்ணயம் செய்து எடுத்திட வேண்டும் என்ற ஆணையை உடனே நிறைவேற்ற வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, கோவில்பட்டி பால் குளிரூட்டும் நிலையத்தில் வைத்த மில்க் ஸ்கேன்னர் மூலம் பாலை பரிசோதனை செய்ய வேண்டும்.
அனைத்துச் சங்கங்களுக்கும் பால் தரம் பார்க்கும் இயந்திரம் வழங்க வேண்டும்.
கறவை மாடுகளுக்கு நபார்டு வங்கி மூலம் தரப்படும் மானிய நிறுத்தத்தைக் கண்டித்தும், மானியத்தை உடனே வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பால் உற்பத்தியாளர் சங்க வட்டாரத் தலைவர் ஜார்ஜ் நியூட்டன், வட்டாரச் செயலர் லிங்கையா, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் சங்கர், மாவட்டச் செயலர் பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.