
மழை வெள்ளத்தில் கலந்த எண்ணெய் கசிவு
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு பக்கமான எண்ணூர், மணலி பகுதி மக்கள் மழை வெள்ளத்தோடு எண்ணெய்யும் கலந்து வீடுகள் மட்டுமில்லாமல் கடல் பரப்பையும் நாசமாக்கியது. இதனையடுத்து மழை பாதிப்பில் எண்ணெய் கசிவுகளை சிபிசிஎல் நிறுவனம் தான் என கூறப்பட்டது. மேலும் உடனடியாக இழப்பீடு வழங்கவும், எண்ணெய் கழிவுகளை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் எண்ணெய் கசிவுகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேவையான ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
எண்ணெய் அகற்றும் பணி
எண்ணூர் கிரீக் பகுதியில், மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெயை உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து அகற்றப்படும் எண்ணெய் உட்பட அபாயகரமான கழிவுகளை கும்முடிப்பூண்டியில் உரிமம் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படும். இந்த எண்ணெய் அகற்றும் பணியை விரைவுபடுத்துவதற்காக மேலும் சில எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சில இடங்களில் மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்றுவதற்கு எண்ணெய் அகற்றும் சிறப்பு இயந்திரங்கள் (Booms) கொண்டு வரப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெய் கழிவுகளையும், சேதமடைந்த பொருள்களையும் அகற்றுவதற்காக தேர்ந்த அனுபவங்களையும் தேவையான இயந்திர வசதிகளையும் கொண்டுள்ள சிறப்பான முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து கண்காணிப்பு
எண்ணெய் அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அருகிலுள்ள நாட்டுக்குப்பம் கிராமத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினால் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பல்லுயிர் இழப்புகளை விரைந்து மதிப்பீடு செய்யும் பணிகளும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கால்நடை பாதுகாப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை, தம்முடைய அலுவலர்களை அந்தப் பகுதியிலேயே நிறுத்திவைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்