
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேற்குவங்க உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி கர்ணன் தலைமை நீதிபதியின் ஒரு உத்தரவை ரத்து செய்ததால் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சென்ற நிலையிலும் நீதிபதிகள் மீது தொடர்ந்து புகார் கூறி வந்தார். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து நீதிபதி கர்ணன் மீது உச்சநீதிமன்றம் தாமாகவே முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீதிபதி கர்ணனுக்கு கடந்த மே 9-ந் தேதி 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இதையடுத்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரை கைது செய்வதற்காக மேற்குவங்க மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி, கர்ணன் 4-வது முறையாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை பரிசீலித்த உச்சநீதிமன்றம், தண்டனையை ரத்து செய்ய மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.