
நீலகிரி
நீலகிரியில் காலையில் வெயிலால் வாட்டி வதங்கும் மக்கள், மாலையில் பெய்யும் ஆலங்கட்டி மழையால் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், அனைத்து இடங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கூடலூர் பகுதியிலும் காலை முதல் பிற்பகல் 2 மணி வரை வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்கிறது.
பின்னர், மேகமூட்டங்கள் சூழ்ந்து சாரல் மழையால் தொடங்குகிறது. அது அப்படியே அதிகரித்து வெப்பத்தை தணிக்கும் அளவுக்கு மழை பெய்கிறது.
இருவேறு காலநிலைகளையும் அனுபவிக்கும் இம்மக்கள் மழை வரும்போது இதமான காலநிலை ரசிக்கின்றனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களின் எல்லையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது. தற்போது மாலை வேளைகளில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால் குளுமையான பருவம் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்தும் கூடியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென மழப் பெய்ததால் விவசாயிகள், மக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் மழை, ஆலங்கட்டியாக உருமாறியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், ஆலங்கட்டி மழைத் தொடர்ந்துப் பெய்ததால் மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதம் அடைந்தது.
ஆனால், மக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிதான். சிறுவர்கள் ஆலங்கட்டியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து விளையாடினர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி இருந்த வேளையில் தற்போது மாலை நேரத்தில் சாரல் மழை பெய்வதால் குளுமையான காலநிலை அனுபவிக்கிறோம் என்று சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சித் தெரிவித்தனர்.