
திருவள்ளூர்
திருவள்ளூரில் தவறு செய்யாத தன்னை போலீஸ் அடித்ததால் இளைஞர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், அருகே உள்ள வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வேப்பம்பட்டு பேருந்து நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, பூந்தமல்லியில் இருந்து வந்த அரசு பேருந்து பிரபாகரனின் மோட்டார் சைக்கிளை மோதுவதுபோல் வந்து நின்றதாம். இதனால், மிரண்டுபோன பிரபாகரன் பேருந்தின் நடத்துநரிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
உடனே பேருந்தின் ஓட்டுநர் அந்தப் பகுதியில் உள்ள செவ்வாப்பேட்டை காவலாளர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த காவலாளர்கள் பிரபாரனை சரமாரியாக அடித்தனராம்.
இதனையடுத்து தவறு செய்யாத தன்னை காவலாளர்கள் தாக்கியதால் பிரபாகரன் மனவேதனை அடைந்துள்ளார். உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பம்பட்டு இரயில் நிலையம் சென்று சென்னை நோக்கிவந்த இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக திருவள்ளூர் இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிந்த நிலையில், பிரபாகரனின் உறவினர்கள் நேற்று இரவு திருவள்ளூர் – ஆவடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்குவந்த செவ்வாப்பேட்டை காவலாளர்கள் அவர்களிடம் கலைந்து செல்லுமாரு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், கலைந்து செல்ல மறுத்ததால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.