
திருப்பூர்
தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்திவிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று திருப்பூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்துத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது.
கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றதால் ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இதனால் அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கின.
இதனையொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பி.எஸ்.என்.எல். நிறுவன சங்க ஊழியர்கள் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நேற்று கூடினர்.
பின்னர் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆண்டனி மரியபிரகாஷ் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் 1–ஆம் தேதி முதல் புதிய ஊதிய விகித மாற்றம் வழங்கப்படாமலே இருந்து வருகிறது. இதை உடனடியாக வழங்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உடனடியாக நிறுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ள 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் செல்போன் கோபுரங்களை பிரித்து தனியாக துணை நிறுவனம் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தனியார் மயமாக்குவதற்கு முதல்படியாக இருந்து வருவதால் இந்த முயற்சியை கைவிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.