
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளியில் செல்போனில் படம் பார்த்த மாணவனை மூன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவனின் தந்தை அடித்ததில் மயங்கி விழுந்த மாணவன் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்து 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக முத்தேகவுடா என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புப் பொறுப்பேற்றார்.
இங்கு சூளகிரி அருகே காமன்தொட்டி பக்கமுள்ள கங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரின் மகன் பிரேம்குமார் (17) பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவு படித்து வருகிறார்.
மாணவர் பிரேம்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் செல்போனில் படம் பார்த்ததாகவும், இதைப் பார்த்த சில மாணவர்கள், இது குறித்து தலைமை ஆசிரியர் முத்தேகவுடாவிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் ஆசிரியர்கள் மூவரை அழைத்து, மாணவர்களை கண்டிக்குமாறு அறிவுறுத்தினார். அந்த மூன்று ஆசிரியர்களும் அங்குச் சென்று பிரேம்குமாரை பிரம்பால் அடித்து வெளுத்துள்ளனர்.
அந்த நேரம் மாணவர் பிரேம்குமாரின் தந்தை கிருஷ்ணப்பா, சீருடை வாங்குவது தொடர்பாக பள்ளிக்கு வந்துள்ளார். அவருக்கு இதுப் பற்றி தகவல் தெரிந்ததும், அவரும் மகனை அடித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் தந்தை அடித்ததில் பிரேம்குமார் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டுச் சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பிறகு மாணவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.
பிரேம்குமார் மூச்சு விட சிரமப்படுவதால் மேல் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சூளகிரி காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளகிரியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் தந்தை அடித்ததில் மாணவர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.