இந்தியாவை உலுக்கிய சுவாதி கொலை - இன்றோடு ஓராண்டு நிறைவு!!!

First Published Jun 24, 2017, 11:14 AM IST
Highlights
a brief story about swathi murder


ஆயிரம் ஜோடி கண்கள் கவனிக்க நான் அகாலமாக மரணிப்பேன், அதை உலகமே திரும்பிப் பார்க்கும், தனது சாவு குறித்து விக்கிப்பீடியாவே உருவாகும் என்று சுவாதி சத்தியமாய் நினைத்திருக்க மாட்டார். ஆனால் இவையெல்லாம் நிகழ்ந்து, ‘அதுக்கும் மேலே’யும் நிகழ்ந்துவிட்டது. 

2016 ஜூன் 24 ம் தேதி காலை 6:30 மணிக்கு சுவாதி செல்ல வேண்டிய ரயில் பிளாட்ஃபார்மை நோக்கி வந்து கொண்டிருந்த நேரம் சுவாதி வெட்டப்பட்டார். அந்த சமயத்தில்  கடந்து செல்லும் ரயில்களின் ஜன்னலோர கண்கள் இந்த காட்சியை கண்டு நிலை குத்தி நிற்கின்றன. அடுத்தடுத்த நொடிகளில் கொலை இளைஞன் தண்டவாளங்களில் குதித்து எஸ்கேப் ஆகிறான். அவனை பிடிக்க, அடிக்க முயன்று பின்னே ஓடும் மனிதர்கள் தோற்று திரும்புகிறார்கள். 

அதன் பிறகு வழக்கமான ஃபார்மாலிட்டிகள் துவங்க ஆரம்பிக்கின்றன. தனது தம்பியுடன் ரயில்வே ஸ்டேஷன் வரும் சுவாதியின் அப்பாவிடம் மிகப்பெரிய அதிர்ச்சி இல்லை, அவரது தம்பியிடம் அதிர்ச்சியே இல்லை . இந்த விஷயங்களெல்லாம் விசாரணையின் போக்கில் அலசப்பட்டது, கடந்து சென்றதும் தனிக்கதை.

சுவாதி கொலை வழக்கின் விசாரணை வேகமெடுத்து பாய்ந்தது. கொலை நிகழ்ந்த சில நிமிடங்களில் ரயில்வே ஸ்டேஷனின் சுற்றுவட்டார பகுதிகளை கடந்து சென்ற நபர்களை பற்றிய வீடியோ ஃபுட்டேஜ்கள் அலசப்பட்டன. அதில் சிக்கினார் ஒரு இளைஞன்.

அவனை தேடத்துவங்கிய விசாரணையின் நீட்சி சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் நள்ளிரவில் போய் நின்றது. அதுதான் அந்த இளைஞனின் ஊர். அவர் பெயர் ராம்குமார். 

ஆட்டுக்கொட்டகையில் படுத்திருந்த இளைஞனை பாய்ந்து மடக்கியது போலீஸ். தானே கழுத்தறுத்து கொண்டதாக மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். விசாரித்தபோது ‘எங்களிடமிருந்து தப்பிக்க முயன்று தோற்றதால் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றான்.’ என்றது போலீஸ். 
ராம்குமார் கைது விவகாரத்தில் அதிகாலையிலேயே விழித்து சுவாதி வழக்கை அசைபோட துவங்கியது தமிழகம்.

ராம்குமார் அத்தனை உரிமைகளும் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், போலீஸே அவரது கழுத்தை அறுத்துவிட்டு ராம்குமார் தற்கொலைக்கு முயன்று நாடகமாடியதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சுவாதியின் மரண விவகாரத்துக்கு சாதி சாயம் பூசப்பட்டது, இதில் அரசியல்வாதிகள் களமிறங்கி அதை அரசியல் ரீதியிலும் நகர்த்தினர். 

விசாரணை நடந்தபடியே இருக்க சிகிச்சைக்கு பின் தேறிய ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 16_ம் தேதி சிறையிலுள்ள எலெக்ட்ரிக் வயரை கடித்ததாக கொண்டுவரப்பட்ட  ராம்குமார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

சுவாதிக்கு நிகழ்ந்தது வெளிப்படையான கொலை, ராம்குமாருக்கு நிகழ்ந்தது மறைமுக கொலை என்றே விமர்சனங்கள் இன்று வரை வெடித்துக் கொண்டிருக்கின்றன. 

ஜூன் 24 2016 முதல் செப்டம்பர் 16 2016 வரையிலான காலங்களில் சுவாதி மற்றும் ராம்குமாரின் சொந்த விவகாரங்கள் விவாத பொருளாக சேனல்களுக்கு உதவின, கவர் ஸ்டோரிகளாக வாரப்பத்திரிக்கைகளை நிறைத்தன, தினசரி பரபப்பாக பேப்பர்களை ஆக்கிரமித்தன.

ரமேஷ் செல்வன் என்பவர் ‘சுவாதி கொலை வழக்கு’ எனும் பெயரில் ஒரு படம் இயக்கி விட்டு ரிலீஸுக்கு காத்திருக்கிறார். ஆக இந்த இரண்டு மரணங்களையும் வைத்து சம்பாதித்தவர்கள் இவர்கள் இருவருக்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத எத்தனையோ பேர்கள். 

 

இந்த வழக்கில் பல கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை!...ராம்குமார் உண்மையிலேயே சுவாதியை காதலித்தாரா? சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கை விசாரித்த விபரங்களின் முழு வடிவம் எங்கே? சுவாதியின் குடும்பம் இந்த வழக்கை கண்டும் காணாதும் போன மர்மம் என்ன? ராம்குமார்தான் இந்த கொலையை செய்தாரா, அப்படியே ஆனாலும் தனக்காகதான் இந்த கொலையை செய்தாரா?புழல் சிறைக்குள் தற்கொலைதான் செய்தாரா ராம்குமார்? என்று ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன. 

 

click me!