
கரூர்
சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கரூரில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கடந்த 2012–ஆம் ஆண்டு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன், கட்டிக்கலை போன்ற பாடங்களை நடத்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 549 பேர் நியமிக்கப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் 298 பேர் நியமிக்கப்பட்டனர்.
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பூதியம் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கரூர் மாவட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கரூரில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் பாரதிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். கல்வித்துறை அலுவலர் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் இந்திரமூர்த்தி கோரிக்கை தொடர்பாக பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வேண்டும்! வேண்டும்! பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பொன்னம்பலம், மாவட்ட செயலாளர் அமுதன் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர், ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர்.