
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் காமராசர் திறந்து வைத்த அரசுப் பள்ளியில் குடிக்கவும் தண்ணீர் இல்லை, கழிவறைக்கும் தண்ணீர் இல்லாததால் இன்றி மாணவிகள் அருகில் உள்ள பகுதிகளுக்குச் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் 400 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
பள்ளியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் குடிக்க தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மழையின்றி ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டதால் மாணவ, மாணவிகள் குடிநீர் இன்றியும், கழிவறைக்கு பயன்படுத்த தண்ணீர் இன்றியும் தவித்தனர். மேலும் மதிய உணவு சமைக்கவும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக குடிநீரை பணம் கொடுத்து வாங்கி ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியர்கள் கழிவறைகளை பயன்படுத்துவதற்காக, மாணவிகள் அருகே உள்ள பகுதிகளுக்குச் சென்று குடங்களில் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாணவ, மாணவிகளின் நலன்கருதி இந்தப் பள்ளிக்கு உடனடியாக குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தப் பள்ளி காமராசர் முதல்வராக இருந்தபோது அவரால் திறந்து வைக்கப்பட்டது என்பதும், உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி இந்தப் பள்ளியில்தான் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.