
கன்னியாகுமரி
இடஒதுக்கீட்டுக்கான தடையை ரத்து செய்யக்கோரி போராடும் மருத்துவர்கள், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று அடித்துக் கூறுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த இடஒதுக்கீட்டிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
“இந்த தடையை ரத்து செய்ய வேண்டும்,
தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, தர்ணாப் போராட்டம், புறநோயாளிகள் பிரிவு பணி புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கையிலெடுத்து அதனை நடத்தியும் வருகின்றனர். இருந்தும், மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க குமரி மாவட்ட கிளை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்திற்கு முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடத்தியது.
இந்தப் போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் முத்துகுமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் பிரதீப்குமார், ஜெபர்சன், ரெனிஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இப்போராட்டம் குறித்து அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துகுமார் கூறியது:
“எங்களது கோரிக்கைத் தொடர்பாக 12–வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்திருந்தார்கள். குறிப்பாக மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியாற்றி வரும் சுமார் 167 மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கும், அவசர கால சிகிச்சை பிரிவுக்கும் தேவையான மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று அவர் அடித்துக் கூறினார்.