
தூத்துக்குடி
கத்திரி வெயிலால் கழுகுமலை கழுகாசலமூர்த்தி தாக்கம் அடையாமல் பாதுகாக்க கோயிலில் சிறப்பு பூசைகள் நடைபெற்றன. மேலும், கருவறையை சுற்றி இரண்டடி உயரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு கழுகாசலமூர்த்தியை குளிர்ச்சி அடைய செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்.
ஆண்டுதோறும் கத்திரி வெயில் தொடங்கும்போது, இங்கு வெப்பத்தைத் தணிக்கும் சிறப்பு பூசைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று கோயில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு திருமுழுக்கு மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கத்திரி வெயில் காலம் முடியும் வரை கழுகாசலமூர்த்தி, வெயிலால் தாக்கம் அடையாமல் பாதுகாக்கும் வகையில் கருவறையை சுற்றி இரண்டடி உயரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதனால், சாமி, வெயிலின் தாக்கம் அடையாமல் குளிர்த்த மனதுடன் அடியார்களுக்கு அருள்வார் என்பது உலகுரை.
இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை திருமேனி செட்டியார் குடும்பத்தினர் செய்திருந்தனர்
இந்த நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், கிரிவலக் குழுத் தலைவர் முருகன் உள்பட கோயில் ஊழியர்கள், அடியார்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.