
தஞ்சாவூர்
கும்பகோணம், விஸ்வநாதர் கோவில் சிவலிங்க ருத்ராட்ச கவசத்தின் மீது ஆறு அடி நீள பாம்பு சட்டை கிடந்தது. இதை பார்த்த அடியார்கள் பரவசத்தில் பொங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தேப்பெருமாநல்லூரில் உள்ளது விஸ்வநாதர் கோவில். இங்கு வழிபடுவோருக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
இங்கு விஸ்வநாதருக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே ஆராதனை நடைபெறும். இக்கோவிலில் பிரதோஷ நாளில் விஸ்வநாதருக்கு அணிவிக்கப்படும் ருத்ராட்ச கவசம் தனி சன்னதியில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று விஸ்வநாதருக்கு தீபாராதனை காட்டிவிட்டு ருத்ராட்ச கவசத்துக்கு தீபாராதனை காட்டச் சென்ற கோவில் பூசாரி பிரகாஷ், பாம்பு! பாம்பு! என பெரும் சத்தம் போட்டபடி வெளியே அலறியடித்து ஓடிவந்தார்.
இதனையடுத்து அடியார்கள் சன்னதியின் உள்ளேச் சென்று பார்த்தனர். அப்போதுதன் தெரிந்தது, ருத்ராட்ச கவசத்தின் மீது இருந்தது பாம்பு அல்ல என்று. அது பாம்பு சட்டை என்று. இதைப் பார்த்த அடியார்கள் பரவசத்தில் மூழ்கினர். அந்தப் பாம்புச் சட்டை ஆறு அடி நீளம் இருந்தது.
இதுகுறித்த தகவல் தீயாக பரவியதால் பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த அடியார்கள் கோவிலுக்குக் கூட்டம், கூட்டமாக வந்து ருத்ராட்ச கவச சன்னதியை பார்வையிட்டுச் சென்றனர்.
இதே கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரியகிரகணத்தன்று பாம்பு வில்வ இலைகளால் விஸ்வநாதருக்கு வழிபாடு செய்தது என்பது அனைவரும் அறிந்ததே.