
சிவகங்கை
தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவித்து மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் 4-வது நாளாக நடைபெறும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று பெண்கள் கும்மியடித்து கோரிக்கைகளை அழுத்தமாக வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை ஆகியவை சார்பில் கடந்த 17-ஆம் தேதி போராட்டம் ஒன்றைத் தொடங்கினர்.
அவர்களது கோரிக்கைகள்:
“மத்திய அரசு தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவித்து கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்,
வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,
விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தைத் தொடங்கினர்.
மேலும், இந்த போராட்டக்காரர்கள், “டெல்லியில் போராடி வரும் தமிழகத்து விவசாயிகளுக்கு ஆதரவும் தெரிவித்தனர்.
இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றும்வரை காத்திருப்போம் என்று நான்காவது நாளாக காத்திருக்கின்றனர்.
சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெறும் இந்த காத்திருப்புப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர்.
இந்த நிலையில் நான்காவது நாளான நேற்று, விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை வழக்கம்போலத் தொடர்ந்தனர். விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சாத்தையா, மாவட்ட நிர்வாகிகள் கோபால், முத்துராமலிங்கம், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கும்மியடித்து தங்களது கோரிக்கைகளை அழுத்தமாக வலியுறுத்தினர்.