
சிவகங்கை
தமிழகம் முழுவதும் உள்ள சிறிய, பெரிய நட்சத்திர ஓட்டல்கள் மண்பாண்ட சமையலுக்கு மாறி வருகின்றன. அவ்வளவு ஏன், உணவு பரிமாறுவது கூட மண் கிண்ணங்களில்தான். மானமதுரையில் மண் கிண்ணங்கள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு புகழ்ப்பெற்ற நகரம். கலை நயமிக்க மண்பாண்ட பொருட்கள் இங்குதான் தயாராகின்றன. இவை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்களுக்கு என்று தனி மௌசு உண்டு.
தற்போது கோடைகாலம் நடந்து வருவதால், குளிர்ச்சியான நீர், உணவு வகைகளையே மக்கள் விரும்புகின்றனர். அதிலும், மண்பாண்ட பொருட்களில் வைத்த உணவுகள் என்றால் மிக நன்று. எனவேதான் மக்கள் மண்பாண்ட பொருட்களுக்கு அதிக வரவேற்பு அளிக்கின்றனர்.
இதேபோல் தற்போது பல்வேறு சிறிய, பெரிய நட்சத்திர உணவு விடுதிகளில் மண்பாண்ட சமையலுக்கு மாறி வருகின்றனர். முன்பெல்லாம் சீன பீங்கான்கள், பிளாஷ்டிக் என இருந்தது. தற்போது பாரம்பரிய மண்பாண்டத்தின் மீது மக்களின் கவனம் செல்கின்றது. இதை உணர்ந்துதான் நட்சத்திர விடுதிகளும் உணவு பொருட்களை பரிமாற மண்பாண்ட பாத்திரங்களையே பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றனர்.
சமீப காலமாக நட்சத்திர விடுதிகளில் சூப் போன்ற வகைகளை விநியோகிக்க மண் கிண்ணங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சூப் கிண்ணங்கள் மண்ணால் தயாரிக்கப்பட்டவையாக உள்ளன. இதற்காக மானாமதுரையில் இருவேறு அளவுகளில் கிண்ணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அவை, 150 மி.லி., 250 மி.லி. என இரு அளவுகளில் முறையே 15 மற்றும் 25 ரூபாய் என விலை வைத்து விற்பனைச் செய்து வருகின்றனர். ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு குறைந்தபட்சம் 50 முதல் 100 கிண்ணங்கள் வரை தேவைப்படும். வாடிக்கையாளர்களை ஈர்க்க வித விதமான கிண்ணங்கள் மானாமதுரையில் தயாரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பாளர் கூறியது:
“தற்போது கோடைகாலம் என்பதால் பெரும்பாலான மக்கள் மண்பாண்ட பொருட்களை விரும்புகின்றனர். அதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறியது முதல் பெரிய நட்சத்திர விடுதிகளில் மண்பாண்ட கிண்ணங்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிண்ணங்களை அதிக அளவு விற்பனை செய்து வருகிறோம்.
வீடுகளிலும் மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தற்போது மானாமதுரை பகுதியில் மண் கிண்ணங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாள் ஒன்றுக்கு 20 முதல் 50 கிண்ணங்கள் வரை தயாரிக்கிறோம், அதன்பின் சூளையில் வைத்து சுடப்பட்ட பின் விற்பனைக்கு அனுப்புகிறோம்.
கிண்ணங்கள் மட்டுமின்றி மற்ற சமையல் உபகரணங்களும் மண்ணால் செய்து ஆர்டரின் பெயரில் விற்பனை செய்கிறோம்.
மண்பாண்ட பொருட்களில் சமையல் செய்து அருந்தினால் உடலுக்கும் குளிர்ச்சி, உடல்நலமும் பேணப்படும் என்பதால் மண்பாண்ட பொருட்களுக்கு மௌசு அதிகரித்துள்ளது” என்று அவர் கூறினார்.