
சேலம்
மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சேலத்தில் கருப்பு பட்டை அணிந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஒருமணிநேரம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
“மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று தமிழகம் முழுவதும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின்படி சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு பணியைப் புறக்கணித்தனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் டீன் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு மருத்துவச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் வசந்தகீதன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுபற்றி மருத்துவர் செந்தில்குமார் கூறியது, ‘மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அறுவை சிகிச்சைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்றுக் கூறினார்.