
ஒயின் ஷாப்பை அடித்து துவம்சம் செய்த பெண்கள்…சம்மட்டி, கடப்பாரையுடன் களம் இறங்கி சாதனை…
சென்னை அருகே புதிதாக அமைய இருந்த ஒயின் ஷாப்பை பெண்கள் குழு ஒன்று சம்மட்டி, கடப்பாறையுடன் சென்று அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். பெண்களின் இந்த ஆவேச போராட்டம் அங்கிருந்த பொது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததையடுத்து தமிழகத்தில் சுமார் 3300 மதுக்கடைகள் அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அகற்றப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய மதுக் கடைகளை திறக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்கு ஆங்காங்கே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர்-சோமங்கலம் சாலையில், பூந்தண்டலம் சக்தி நகரில் புதிய மதுபானக் கடை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பெண்கள், கோரிக்கை வைப்பது, மனு அளிப்பது போன்றவை வேலைக்கு ஆகாது என நினைத்து சம்மட்டி, கடப்பாறையுடன் களம் இறங்கினர்.
300க்கும் மேற்பட்டபெண்கள் ஒன்று கூடி கடப்பாரை, சம்மட்டியுடன் சென்று, புதிய மதுபானகடைக்கு வைத்திருந்தசட்டரை அடித்தும், இடித்தும் தள்ளினர்.
அதோடு, சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்மதுக்கடையை அப்பகுதியில் அமைக்காமல் இருக்க, மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக கூறியதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.