
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளை கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நகராட்சி, பேரூராட்சிகளிலும் பாதிக்கு மேல் பெரும்பான்மை பலத்துடன் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து மார்ச் 2 ஆம் தேதி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் பதவியேற்று கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 இடங்களில் திமுக வென்றது. கும்பகோணம் மாநகராட்சி தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டு, அவர் வெற்றி பெற்றார்.சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார்.
இந்நிலையில் மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கூட்டணி கட்சிக்கு பங்கீட்டு கொடுத்த பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக தாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இத்தகைய செயல் திமுக உட்பட கூட்டணி கட்சியினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி, தலைமைக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி அனைவரும் தங்கள் பதவியை ராஜனாமா செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனால் நகரப்புற மறைமுக தேர்தலில் வெற்றப்பெற்ற பலரும் தங்கள் பதவியை ராஜனாமா செய்தனர். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட பதவிகளுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுத்துறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டமும் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிகப்பட்டுள்ளது. முன்னதாக ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தலின் போது கட்சியினருக்கிடையே ஏற்பட்ட ரகளை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது வரும் 26 ஆம் தேதி அந்த பேரூராட்சிக்கு தேர்தல் நடத்தபடவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.