
திண்டுக்கல்
அரசியல் எனக்கு சரிபட்டு வராது என்று நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ. கருணாஸ் வந்திருந்தார்.
திருவிழாவில் கருணாஸ் பேசியது:
“என்னுடைய உண்மையான பெயர் கருணாநிதி ஆகும். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி சினிமா, அரசியல் துறையில் செய்த சாதனையை நிச்சயமாக யாரும் கடந்து வர முடியாது. அதனால்தான் எனது பெயரை மாற்றிக் கொண்டேன்.
இளமையிலேயே வறுமையின் உச்சத்தை பார்த்தவன். உணவு, உடை, இருக்க இடம் இல்லாமல் சென்னையில் அழைந்தேன்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்திற்குச் சென்றேன். அவர் இல்லாதபோதும் சட்டமன்றத்திற்கு செல்கிறேன். பேச்சுகள் மாறிக்கொண்டு இருக்கின்றன. அதுபோல என்னால் பேச முடியாது.
என்றைக்கும் ஒரே பேச்சு. அதுவும் உண்மையாக இருக்க வேண்டும். கனவில் கூட பொய் சொல்லக் கூடாது என்று நினைப்பவன். அரசியல் நமக்கு சரிபட்டு வராது.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்காக கடைசி வரை விசுவாசமாக இருப்பேன். ஆனால் தற்போது அவர்களுக்குள் நடக்கக் கூடிய பிரச்சனையில் நான் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது.
நான் வருமான வரி முறையாக செலுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கூவத்தூரில் ரூ.5 கோடி, ரூ.10 கோடி வாங்கினேன் என்று கூறுகிறார்கள். இதிலும் சிறிதளவும் உண்மை இல்லை.
கை, கழுத்தில் இவ்வளவு நகை அணிந்திருப்பது குறித்து கேட்கிறார்கள். கருப்பாக இருப்பவனுக்குதான் இந்த நகையை கண்டுபிடித்தார்கள் என்று என் மனைவியிடம் அடிக்கடி கூறுவது உண்டு.
பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் இயந்திரத்தில் போட்டு பழைய ரூபாய் நோட்டை அரைக்கின்றனர். நாளைக்கே புதிய ரூ.2000 நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துவிட்டால் என்ன ஆகும். எனவே இருக்கிற வரையில் அனுபவிக்க வேண்டும். அதற்குதான் இந்த நகைகள்” என்று அவர் பேசினார்.