
திண்டுக்கல்
சாலைப் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பிச்சாண்டி கட்டடத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட ஆறாவது மாநாடு நடைப்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் டி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் சிறப்புரை ஆற்றினார். மாநிலப் பொதுச் செயலர் மா.பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில், “சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாதங்களை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும்.
பணி நீக்க காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.
சாலைப் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.1300 லிருந்து ரூ.1900-ஆக உயர்த்த வேண்டும்” உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில், மாவட்டச் செயலர் ஆர்.ராஜா, அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.