சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரணை செய்த காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு குற்றவாளி சாந்தகுமார் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.
கொலை குற்றவாளி கைது
தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் கைதிகள் மரணம் தொடர்வதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தநிலையில், ஶ்ரீபெரும்புத்தூர் காவல்நிலையத்தில் குற்றவாளி ஒருவர் காயத்தோடு உயரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சாந்தகுமார் (30) என்பவர் மற்றொரு சரித்திர பதிவேடு குற்றவாளியான PPG சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளி ஆவார். இவர், கடந்த 13.04.2024 அன்று புட்லூர் பகுதியில் அவரது கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து கத்திகள் மற்றும் டம்மி துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
நெஞ்சு வலி- குற்றவாளி மரணம்
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் மற்றொரு குற்றச்செயல் புரிய சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, விசாரணையின் போது, சாந்தகுமார் (30) தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததால், அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். இதன் காரணமாக சாந்தகுமாரின் இறப்பின் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை செய்து வருகிறார்.
ஆய்வாளர் பணி இடைய நீக்கம்
சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரணை செய்த காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும். பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை மற்றும் குற்றவியல் நடுவர் அவர்களின் விசாரணை அறிக்கையும் வந்த பின் இவ்வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.