திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்… இபிஎஸ் ஆவேசம்

Published : Mar 31, 2026, 09:47 PM IST
EPS

சுருக்கம்

நான் முதல்வராக இருந்தபோது எல்லோரும் பாதுகாப்பாக இருந்தனர். பொற்கால ஆட்சி. இந்த ஆட்சி எப்போதும் போகும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்

தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, இன்று சிவகாசியில் பரப்புரை முடித்துவிட்டு பரமக்குடி செல்லும் வழியில், அருப்புக்கோட்டையில் வரவேற்க காத்திருந்த மக்களிடையே சில நிமிடங்கள் பேசினார்.

அப்போது அவர், “இது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வென்ற தொகுதி. அதிமுக வேட்பாளர் சேதுபதியை நிறுத்தி இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடந்தது. திறமையற்ற முதல்வர் ஆள்வதால் இரண்டு வயது குழந்தைகூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இதற்குப் பொறுப்பானவர் முதல்வர். 6999 போக்சோ வழக்குகள் பதிவுசெய்துள்ளனர் என்று சொன்னால் அத்தனை பேர் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வளவு பிரச்னைக்குக் காரனம் கஞ்சா விற்பனை. இதை விற்பதே திமுக கட்சியினர்தான் அதனால் தான் அகற்ற முடியலை, அதிமுக ஆட்சியில் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்பேன்.

நான் முதல்வராக இருந்தபோது எல்லோரும் பாதுகாப்பாக இருந்தனர். பொற்கால ஆட்சி. இந்த ஆட்சி எப்போதும் போகும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு எல்லா பொருட்களும் விலை உயர்வு. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?

திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையான உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமை ஏற்றும் அரசு தேவையா?

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலம். திமுகவின் நான்காண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள். அதிமுக ஆட்சியின் வருவாயை விட ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது, ஒருபக்கம் வருவாய், ஒருபக்கம் கடன், திட்டம் எதுவும் இல்லை, அப்படியென்றால் பணமெல்லாம் எங்க போனது..? போகவேண்டிய இடத்துக்குப் போய்விட்டது. புரிந்துகொள்ளுங்கள்.

திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். திமுக ஆட்சியில் உரிமைத் தொகை உடனடியாக கொடுக்கவில்லை. 28 மாதம் கழித்து அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே கொடுத்தனர். தானாக கொடுக்கவில்லை. இப்போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.

சரியான நேரத்திற்கு பணிக்கும், படிக்கவும் செல்ல ஏதுவாக, 5 லட்சம் மகளிர்க்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவுசெய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எந்தவித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

அரிசியோடு இனி பருப்பும், எண்ணெயும் விலையில்லாமல் வழங்கப்படும். 125 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றவில்லை திமுக அரசு, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். நெசவாளர் ஓய்வூதியம் உயர்த்தப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டிலிருந்து 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1400 யூனிட்டாக அதிகரிக்கப்படும். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து அதிமுக திட்டங்களும் தொடங்கப்படும். வீடற்ற ஏழைகளுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அருப்புக்கோட்டை வேட்பாளர் சேதுபதிக்கு வாக்களித்து வெற்றி செய்யுங்கள்’’ என்று முடித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு சம்பளத்தில் சொந்த கிளினிக்..! அதிகாரிகளுக்கு அல்வா..! ஆதாரத்துடன் சிக்கிய முத்தனேந்தல் பி.எம்.ஓ மார்கண்டன்..!
சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் தவெக கட்சி தலைவர் விஜய் ! நயினார் நாகேந்திரன் பேட்டி