புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கொள்ளை; 30 இலட்சத்தில் 2 இலட்சம் மீட்பு…

First Published Jan 2, 2017, 9:15 AM IST
Highlights


இளையான்குடி,

இளையான்குடி அருகே ரூ.30 இலட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.2 இலட்சம் மீட்கப்பட்டது.

மதுரை தெற்குவெளி வீதி குப்புபிள்ளை தோப்புத்தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் முஜிபுர்ரகுமான். இவர், தன்னுடைய நண்பரான சிவகங்கையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடம், செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை மாற்றித் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுப்புராஜ், ராஜேந்திரன், மந்தக்காளை என்ற அழகேசன், வீரபாண்டி ஆகியோர் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் உள்ள ரூ.30 இலட்சத்திற்கான செல்லாத நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றித் தருமாறு கேட்டுள்ளனர்.

முஜிபுர்ரகுமான் தன்னிடம் இருந்த ரூ.30 இலட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு கடந்த 15–ஆம் தேதி இரவு காரில் சிவகங்கை வந்தார். இளையான்குடியை அடுத்த தாயமங்கலம் விலக்கு ரோடு அருகே அவர் வந்தபோது, பின்தொடர்ந்து இரண்டு கார்களில் வந்த மர்மநபர்கள், முஜிபுர்ரகுமான் காரை மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.30 இலட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து முஜிபுர்ரகுமான் இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலாளர்கள் மந்தக்காளை என்ற அழகேசன், காளிதாஸ், வீரபாண்டி உள்பட ஒன்பது பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரை காவலாளர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ரூ.30 இலட்சம் கொள்ளைபோன வழக்கு தொடர்பாக இளையான்குடி மேற்பார்வையாளர் பாலாஜி, துணை மேற்பார்வையாளர் பீட்டர், ராமசுப்பு ஆகியோர் அடங்கிய காவல் தனிப்படை விசாரணை நடத்தினர்.

அப்போது வழக்கில் தொடர்புடையவர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவலாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவலாளர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலைய பகுதியில் பதுங்கி இருந்த நான்கு பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சின்னசாமி மகன் ஜீவா (24), முருகன் மகன் பிரபு (20), ராமர் மகன் கார்த்திக்குமார் (23), ஜெயராம் மகன் சுப்புராஜா (27) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.2 இலட்சம் மீட்கப்பட்டன.

click me!