
தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்….தென் மாவட்ட மக்கள் சபதம்…
தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஒரு பெரும் திருவிழாவாகவே நடைபெறுகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிகட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜல்லிகட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லுர்,பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
ஜல்லிக்கட்டை நடத்த எப்படியாவது அனுமதி வாங்கிவிட வேண்டும் என்று தமிழக அரசும், மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணனும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றன.நாளை திமுக சார்பில் மதுரையில் மிகப் பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு தென் மாவட்டங்களில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி ஜல்லிகட்டை நடத்தியே தீருவது பொது மக்கள் சபதம் எடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் தென் மாவட்ட மக்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அலங்காநல்லுர், பாலமேடு ஆகிய ஊர்களில் ஜல்லிகட்டு நடைபெறும் இடத்தை தற்போதே தயாராக வைத்துள்ளனர். வாடி வாசலுக்கு வெள்ளை அடித்து சுத்தப்படுத்தியுள்ளனர்.
மேலும் ஜல்லிகட்டில் பங்கேற்பதற்கு காளைகளையும் தயார் படுத்தி வருகின்றனர். இதற்காக காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மண் கிளருதல், சீறிப் பாய்தல் போன்ற பயிற்சிகளில் காளை வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவது தங்களது உரிமை என்றும், இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது உறுதி என்றும் தென்மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.