
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, விளை நிலத்தில் மேய்ந்த 30-க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டன. இதுகுறித்து காவலாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் மயிலம் பகுதிகளில் ஏராளமான மயில்கள் வாழ்கின்றன. அவைகள் இரைக்காக அவ்வப்போது, விவசாய நிலங்களுக்கு வருவது வழக்கம்.
வானூர் ரங்கநாதபுரம், தொள்ளமூர், கொண்டலாம்குப்பம், புதுவை மாநிலம் சந்தைபுதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் விளை நிலங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக மேய்ந்தன. இந்த மயில்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அதிகமாக கூடி, விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது என்று அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், வானூர் தாலுகா கொண்டலாம்குப்பம் தொள்ளமூர் சாலையில் விவசாய நில பகுதியில் ஒரே இடத்தில் 30-க்கும் மேற்பட்ட மயில்கள் நேற்று செத்துக் கிடந்தன.
நேற்று காலை அப்பகுதிக்குச் சென்ற இளைஞர்கள் மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து வானூர் காவல் நிலையத்துக்கும், திண்டிவனம் வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.
திண்டிவனம் வனத்துறையினரும், நெமிலி அரசு கால்நடை மருத்துவர் புருஷோத்தமனும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையும், ஆய்வும் நடத்தினர்.
மேலும் மயில்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. உடற்கூராய்வின் முடிவுக்கு பின்னரே மயில்களின் இறப்பு குறித்து தெளிவான முடிவு தெரியும்.
வானூர் காவலாளர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது உறுதியானது.