
செயங்கொண்டம் அருகே திருமணமாகி நான்கு மாதங்களே ஆன புதுப்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செயங்கொண்டத்தை அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரத்குமார் (22). இவர் பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மகள் சௌந்தர்யா (19) என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு சௌந்தர்யா கிளிமங்கலத்தில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த இரும்புலிக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சௌந்தர்யாவின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் தா.பழூர் சாலையில் செயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயங்கொண்டம் காவல்துறை துணை சூப்பிரண்டு இனிகோதிவ்யன் மற்றும் காவலாளர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருமணமாகி 4 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பில் இருக்கிறது.