தீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! 6 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை- வானிலை மையம்

By Ajmal KhanFirst Published Nov 21, 2022, 1:59 PM IST
Highlights

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தற்போது மழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது அதில், தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (21.11.2022) காலை 0830 மணி அளவில் காரைக்காலில்  இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 470 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை  கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவிற்கு ஆதரவாக அதிமுகவை கரைக்கும் செயலில் எடப்பாடி பழனிசாமி..? திருமாவளவன் விமர்சனம்


 
தமிழகத்தில் மழை எச்சரிக்கை

21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  


சென்னை, புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்;  சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று  சில நேரங்களில் மணிக்கு 20-25 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 30  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து..! கிஷோர் கே சாமியை அதிரடியாக கைது செய்த போலீஸ்

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

21.11.2022 மற்றும் 22.11.2022:  ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 22.11.2022 காலை வரை `சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

கைலாசா மன்னனாக நித்யானந்தா..! காசி தமிழ் சங்கமத்திற்கு அழைக்காதது ஏன் ..? முரசொலி கிண்டல்
 

click me!