
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை துலாகட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா புஷ்கரம் விழா வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு அடியார்கள், ஆன்மிகவாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் நிதி உதவியுடன் காவிரி ஆற்றில் ரூ.1¼ கோடியில் தண்ணீரைதேக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று ஆட்சியர் பழனிசாமி தெரிவித்தார்.
காவிரி புஷ்கரம் திருவிழா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும்போது நடத்தப்படும் குருபெயர்ச்சி விழாவாகும்.
இந்த முறை வரும் குருபெயர்ச்சியானது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாபுஷ்கர விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை காவிரி ஆற்றில் புனிதநீராட சிறப்பான காலமாகும்.
மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி புஷ்கரம் விழா சிறப்பாக நடத்துவது குறித்த முதல் கட்ட ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தலைமை வகித்தார். உதவி ஆட்சியர் சுபாநந்தினி முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், காவிரி புஷ்கரம் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் துலாகட்ட பகுதியில் நிரந்தரமாக தண்ணீர் தேக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது அடியார்கள், ஆன்மிகவாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் நிதி உதவியுடன் ரூ.1 கோடியே 25 இலட்சம் மதிப்பீட்டில் 200 மீட்டர் நீளத்திற்கு காவிரி ஆற்றை ஆழப்படுத்தி, அதில் நிரந்தரமாக தண்ணீரை தேக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், விழாவிற்கு வருகை தரும் அடியார்களுக்கு பேருந்து வசதி, வாகனங்கள் நிறுத்த இடவசதி, ஆடை மாற்றும் இடம் உள்ளிட்டவைகளை அரசு சார்பில் ஏற்பாடு செய்வது என்றும், அதற்கான முதல் கட்ட பணி வருகிற 4-ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் முடிவுச் செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், அதிமுக நகரச் செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், காவிரி புஷ்கர விழா குழுத் தலைவர் ராமானந்தா சாமி, ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி சுப்பிரமணியன், செயலாளர் முத்துக்குமரசாமி, இணை பொருளாளர் வெங்கட்ரமணன், துறவியர்கள் ஒருங்கிணைப்பாளர் வேதாந்த ஆனந்தா சாமி, இணை செயலாளர் அப்பர்சுந்தரம், காஞ்சி காமகோடி பீடத்தின் சிறப்பு பிரதிநிதி ராம்பிரசாத், சிதம்பரத்தை சேர்ந்த தியாகப்பா தீட்சிதர் உள்பட பலர் பங்கேற்றனர்.