பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை
கடந்த திமுக ஆட்சி காலமான 2006 - 2011ம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்ட நிலையில், நேற்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. மேலும் 30 நாட்களுக்குள் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
பொன்முடி சொத்துக்கள் முடக்கம்.?
முன்னதாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது பொன்முடியின் சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது. இந்த முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்து முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறாக இருந்தாலும்,
மேல் முறையீட்டு வழக்கில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதால் முந்தைய உத்தரவு நீடிக்காது எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை புதிதாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக சொத்து முடக்க நடவடிக்கைகளை எடுக்க, இந்த தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்