
திருநெல்வேலி
இந்தியாவின் 13 மாநிலங்களீல் ஆட்சி செய்யும் பாஜகவின் தாமரை விரைவில் தமிழகத்திலும் மலரும் என்று திருநெல்வேலியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நேற்று பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது: “தமிழகத்தில் 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. இந்தக் கூட்டத்தை பார்க்கும்போது, தூய்மையான, நேர்மையான நல்ல ஆட்சி வேண்டும் என்று வந்திருப்பது தெரிகிறது.
மொழியைச் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு மொழிப்போர் தியாகிகளை கைவிட்டு விட்டது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு தேடல் இருந்துகொண்டு இருக்கிறது. தற்போது ஊழலற்ற, நேர்மையான ஆட்சி தேவை என்ற தேடல் இருக்கிறது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மக்களை ஒற்றுமைப்படுத்தி வருகிறது. மோடி, குஜராத் மாநிலத்தில் 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன்பிறகு தான் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.
தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்ப்பட்டுள்ளன. பாரதீய ஜனதா ஆட்சியில் தங்க நாற்கரை சாலை திட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டன.
மதுரை - கன்னியாகுமரி வரை இரட்டை இரயில்பாதை திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழிப்பாதை மின்மயமாக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய இரயில்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறோம்.
அதேபோல, திருவனந்தபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக சென்னை வரை கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தின் நிலை என்ன? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி மத்திய மந்திரி நிதின் கட்கரி ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அந்தச் சாலை திட்டத்துக்கு இதுவரை தமிழக அரசால் ஒப்புதல் கொடுக்கவில்லை.
தற்போது தமிழகம் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவில் இருந்து தமிழகத்தை காப்பற்ற வேண்டும். இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. இதில் 13 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. விரைவில் தமிழகத்திலும் தாமரை மலரும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். அவர்களை மத்திய மந்திரி பொன.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இக்கூட்டத்தில் பாரதீய ஜனதா மாநில செயலாளர் முருகானந்தம், கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.