
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்துள்ளது இராதாமங்கலம் ஊராட்சி. இங்கு நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இராதாமங்கலம் பிரதான சாலையில் நடைப்பெற்ற இந்தப் போராட்டத்திற்கு சங்க கிளை தலைவர்கள் ஆசைத்தம்பி, அமரேஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், முன்னாள் மாவட்டத் தலைவர் அபுபக்கர் உள்பட திரளான பெண்கள் பங்கேற்றனர்.
“இராதாமங்கலம் ஊராட்சியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுசுகாதாரத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்காமல் உள்ள கழிவறைகளை உடனே கட்டித் தர வேண்டும்.
இராதாமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
இராதாமங்கலம் - இருக்கை இணைப்புப் பாலப் பகுதியில் புதிதாக மின் கம்பம் அமைத்து தர வேண்டும்.
எறும்புகண்ணி - உப்புக்குளி சாலையை சீரமைக்க வேண்டும்.
ஊராட்சியில் உள்ள கூட்டுறவு அங்காடியில் அனைத்து ரேசன் பொருட்களும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை இந்த சாலை மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மணிவண்ணன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, வட்ட வழங்கல் அலுவலர் முத்துமுருகேச பாண்டியன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வெற்றிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.