அய்யோ அக்னிநட்சத்திரம்  இன்று தொடக்கம்… வெயில் கொளுத்தப் போகுது உஷார்…

First Published May 4, 2017, 8:10 AM IST
Highlights
Agni natchathram started from today


அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் பொது மக்கள் உஷாராக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே  வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.  ஏப்ரல் மாத மத்தியில் திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில்  100 டிகிரி என்ற அளவை எட்டியது. அதுவும் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் பதிவாகியிருந்தது.

இந்த கடும் வெயில்  பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளது.  சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

காலை 8 மணியில் இருந்தே வெயிலின்  கொடுமை கடுமையாக இருந்து வருகிறது. குடைகள் இல்லாமல் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதுவும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால்  தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றின் விற்பனையும் களை கட்டியது. மேலும் குளிர் பானங்கள் விற்பனையும் அமோகமாக உள்ளது.

ஏற்கனவே கடும் வெயில் இருந்து வரும் நிலையில் இன்று வெயிலின் உச்சம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை இந்த கத்திரி வெயில் இருக்கும்.

கத்திரி வெயில் நாட்களில்  வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் இருக்கும் நாட்களில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெயில் காலத்தில் திட உணவை காட்டிலும் திரவ வகை உணவுகளை அதிகளவில் சேர்க்க வேண்டும். அதிகம் காரம் உள்ள உணவு வகைகளையும், மாமிச உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள தரம் இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி, பருகுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அதனை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!