
தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விளக்களிக்க வேண்டும் என கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பே இல்லை என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பராந்தாமன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்,ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைத் தவிர சசிகலா உள்பட மூவருக்கும் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆக்யோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார் எனவும், எனவே அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
அவருடைய மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதா, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்,
இந்த மனு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட மாட்டாது என்றும் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வின் சேம்பரில் தான் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மிக மிக அரிதான சமயங்களில் மட்டுமே மறு சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்த ஹரி பரந்தாமன், இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.