
கோயம்புத்தூர்
பொள்ளாச்சியில் புதிதாக திறக்கப்பட்ட சாராயக் கடைக்கு பாதுகாப்பு கேட்டு மனைவிகளுடன், ஆட்சியரகத்திற்கு வந்து கணவர்கள் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் இயங்கிவந்த சாராயக் கடையை மூடியதையடுத்து அந்தக் கடையை பத்ரகாளியம்மன் கோவில் வீதிக்கு இடமாற்றம் செய்தனர். இதற்கு மக்கள் வழக்கம்போல எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த சாராயக் கடையை மூடக் கோரி மக்கள் சிலர் கோட்டூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துணை ஆட்சியரிடம் மனு கொடுக்க காவலாளர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி அவர்கள் துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் சாராயக் கடையை மூடக் கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த நிலையில், மக்களில் சிலர் பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் திறக்கப்பட்ட, சாராயக் கடைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உதவி ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சியாமளாவிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “பொள்ளாச்சி நகராட்சி 32, 33, 34, 35 ஆகிய வார்டுகளில் வசித்து வரும் கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு சாராயம் தினசரி வேலை செய்ய தேவையானதாக உள்ளது.
தற்போது சாராயம் வாங்கவும், குடிக்கவும் எட்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள கோட்டூர் சுங்கம் செல்வதால் கூடுதல் செலவாகிறது. மேலும் விபத்துகளால் உயிர் பலியும் ஏற்படுகிறது.
தற்போது கோட்டூர் சாலை ஓம்பிரகாஷ் தியேட்டர் பின்புறம் பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் புதிதாக திறந்துள்ள சாராயக் கடை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் சாராயக் கடையால் குடியிருப்பு வாசிகளுக்கும், மக்களுக்கும் எந்தவித இடையூறும் கிடையாது.
மக்கள் யாரும் புதிய சாராயக் கடைக்கு எதிராக போராடவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள்தான் போராடி வருகின்றனர். எனவே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாராயக் கடைக்கு பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து சிலரது மனைவிகள் கூறியது:
“சாராயக் கடை அருகில் இருப்பதால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விடுகின்றனர். தூரத்தில் இருந்தால் குடித்துவிட்டு, போதையில் தெருவில் படுத்துக் கொள்கின்றனர். இதனால் சட்டை பாக்கெட்டில் இருக்கும் பணம், செல்போன் திருடுபோய் விடுகிறது.
எனவே தற்போது எங்கள் பகுதியில் திறக்கப்பட்டுள்ள சாராயக் கடைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.