
டெங்குவை முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை எனவும், டெங்கு குறித்த நடவடிக்கைகள் அறிக்கையை வரும் 13 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகவும், இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால் தமிழக சுகாதாரத்துறை டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து வருகிறது.இதைதொடர்ந்து இன்று மட்டும் கரூரில் 5 பேர் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர உத்தரவிட கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் , டெங்குவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு உள்ளதா எனவும், டெங்குவை முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் டெங்குவை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து வரும் 13ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.