
தருமபுரி
நீட் வராது என்று மாணவர்களுக்கு உறுதியளித்து ஏமாற்றிய தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி மாவட்ட திமுகச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினர்.
பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச் செல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி கோவேந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.குமார் ஆகியோர் பேசினர்.
இதில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு உறுதியளித்து ஏமாற்றிய தமிழக அரசு பதவி விலக வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் த.ஜெயந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலர் கா.சி. தமிழ்க்குமரன், மாநிலக் குழு உறுப்பினர் மாதேஸ்வரன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.