
தருமபுரி
தருமபுரியில் நீதித்துறை அமைச்சுப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதித்துறை அமைச்சுப் பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து நேற்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு திரண்டு போராட்ட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கீதா, மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயகாந்தன், விஜயலட்சுமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மாது, அரங்கண்ணல், மாவட்ட இணை செயலாளர் சுமதி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
“ஊதிய மாற்றத்தை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஏற்கனவே ஏற்பட்டுள்ள 19 மாத காலதாமதத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
கடந்த 1.4.2003 முதல் பணியில் சேர்ந்த பணியாளர்களிடம் இருந்து புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாயை மத்திய ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் இதுவரை செலுத்தாததால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் நீதித்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஏராளமாக பங்கேற்று கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக நடந்த இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நீதிமன்றங்களில் வழக்கமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.